ஐக்கிய நாடுகள் சபையினர் ஆண்டுதோறும் ஜூன் 1 ம் தேதியை 'உலக பெற்றோர் தினம்' என அறிவித்தனர். இதற்கு காரணம் உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும் என்பதே. இந்த தினத்துடன் பன்னாட்டுக் குழந்தைகள் தினமும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகளுக்காக பெற்றோர்கள் செய்யும் தியாகம் என்பது அளப்பரியது. தனக்கு கிடைக்காத சின்ன சின்ன மகிழ்ச்சிகள் கூட தன் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதே அவர்களின் கனவு, ஆசை, லட்சியம், எல்லாமே. குழந்தைகளின் சிறு சிறு தேவைக்காக கூட தனது
பெரிய நீண்ட நாள் தேவைகளை தள்ளி வைக்கும் ஏழை/நடுத்தர வர்க்க பெற்றோர்கள் இந்த சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இப்படியாக குழந்தைகளைப் பார்த்து பார்த்து கவனித்துக்கொள்ளும்
பெற்றோர்களுக்கு, அதே அன்பும் ஆதரவும் பெற்றோர்களின் முதியவயதில் கிடைக்கிறதா என்பது
கேள்விக்குறிதான். அதிலும் குழந்தைகள் வளர்ந்து திருமணம் என்ற கடைமையை நிறைவேற்றிவிட்டால்
அதற்குப்பின் பெற்றோரின் பாடு திண்டாட்டமே.
சிறுவயதில் ‘தான் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை. தன் பிள்ளைகள்
உணவருந்தினால் போதும்’ என
பல
நாள் பட்டினி கிடந்து வளர்த்த பெற்றோர்களுக்கு அவர்களின் முதிய வயதில் அவர்களுக்கு
போதிய உணவினை வழங்க வசதி இருந்தும் மனம் இல்லாத பிள்ளைகள் பலர் இந்த மண்ணில் இருக்கத்தான்
செய்கிறார்கள். பெற்றோர்கள் உழைத்து சேர்த்த சொத்திற்கு மட்டும் சண்டையிட்டுக்கொள்ளும்
பிள்ளைகள் அவர்களுக்கு சோறிட சண்டையிட்டு கொள்வதில்லை.
ஓடி ஓடி உழைத்து ஓய்ந்த, வயதான காலத்தில், பெற்றோர்கள் தங்கள்
பிள்ளைகளிடம் வேண்டுவது அன்பும் அரவணைப்பையும் மட்டும்தானே தவிர வேறொன்றுமில்லை. பெற்றோர்
இல்லாமல் வாழ்க்கை வழிமாறிச் சென்றோர் இங்கு நிறையபேர். நல்ல வசதி வாய்ப்புகளுடன் இன்று
நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் உங்கள் பெற்றோர்களே.
‘அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வம்’. நீங்கள் உங்கள் பெற்றோரை தெய்வமாக வழிபட வேண்டும் என்பது இல்லை அவர்கள்
உங்களுக்கு செய்த கடனை திருப்பி செய்வதாகவாது எண்ணிக் கொண்டு அன்பும் அரவணைப்பையும்
காட்டுங்கள். பெற்று வளர்த்த கடனை பிள்ளைகள் என்றும் பெற்றோர்களுக்கு திருப்பி செலுத்த
முடியாது என்பது வேறு கதை. பெற்றோர்கள் இருக்கும்போது பிள்ளைகளுக்கு அவர்கள் அருமை
தெரியாது. உங்களால் முடிந்தவரை உங்கள் பெற்றோரை மனக்குறைவின்றி பார்த்துக்கொள்ளுங்கள்.
நன்றி..!
No comments:
Post a Comment