கல்வி வளர்ச்சி நாள் - தமிழ்நாட்டின் கல்வித்தரம் உயர்ந்துள்ளதா??


பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள்  - கல்வி வளர்ச்சி நாள் - தமிழ்நாட்டின் கல்வித்தரம் உயர்ந்துள்ளதா??

தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பேற்ற முதல்வர்களுள் இன்றுவரை மக்கள் மனதில் நீங்காமல் இடம்பெற்றுள்ள முதல்வர் என்றால் பெருந்தலைவர் பெருந்தலைவர். 

எத்தனை அணைகள்; எத்தனை ஆலைகள்; தொழில்நுட்பம் அந்த அளவிற்கு வளர்ச்சியடையாத காலத்திலும் அவரின் முற்போக்கு சிந்தனை நம்மை நெகிழத்தான் செய்கிறது. இன்று அனைத்துத் தொழில்நுட்பங்கள் இருந்தாலும் இயற்கையின் மீதும் மத்திய அரசின்மீதும் பழிபோடும் முதல்வர்கள் மத்தியில் என்றும் தனித்து நிற்பவர் நமது பெருந்தலைவர் தான்.



அணைகள், ஆலைகள் என அவரின் வளர்ச்சித்திட்டப்பணிகள் ஒருபுறம் சென்றுகொண்டிருக்க அடிப்படைத் தேவையான கல்விக்காக அவர் அறிமுகப்படுத்திய திட்டங்கள் அனைத்துமே நமது தமிழகத்தை உலகநாடுகள் முன்பு தலை நிமிர்ந்து நிற்கச்செய்தது என்றால் அது மிகையாகாது. மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத பிள்ளைகளையும் சீறிய திட்டங்களால் சிறப்பாக பள்ளிக்குள் கால்பதிக்க வைத்தார்.

ஆனால் தற்போதைய தமிழ்நாட்டின் கல்வித்தரம் உயர்ந்துள்ளதா? இதற்கு பதில் ‘இல்லை’ என்பதுதான். காலத்தால் 2020-ஐ நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம் ஆனால் கல்வியின் தரத்தில் இன்னும் 1954- ஐ கூட நம்மால் நெருங்க முடியவில்லை என்பதே உண்மை. அரும்பாடுபட்டு அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு வரவைக்க வேண்டும் என நினைத்து அவர் திறந்த பள்ளிக்கூடங்கள் கூட இன்றோ மூடுவிழாவிற்கு தயாராகிவருவதுதான் மிகுந்த வேதனையாக உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு ஈடுகொடுக்காத அரசுப்பள்ளிகளின் தரமும் திறமையற்ற ஆசிரியர்களும் தனியார் பள்ளிகளில் தன் குழந்தைகள் படித்தால்தான் கெளரவம் என நினைக்கும் பெற்றோர்களும், முற்றிலும் வியாபாரமாகிப்போன கல்வித்துறையுமே இதற்கு காரணம்.

இவை அனைத்திற்கும் இடையே இன்னும் ஆங்காங்கே அரசு பள்ளிகள் இயங்கிக்கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் விதிவிலக்கான ஆசிரியர்களையும்  அப்பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களையும் சில கிராம பொதுமக்களையும் கூறலாம்.

அரசுப்பள்ளிகளில் இந்த அவலநிலைப் பற்றி மக்கள் தரப்பிலிருந்து கருத்துக்களைக் கேட்டால் அடிப்படை வசதியில் குறைபாடு, போதிய வகுப்பறைகளின்மை என தொடங்கி பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
தனியார் பள்ளிகளாவது முறையாக செயல்படுகிறதா என்றால் அதுவும் கேள்விக்குறிதான். இதில் STATEBOARD, CBSE, INTERNATIONAL SYLLABUS என பாடத்திட்டங்களும் வேறுபடுகிறது. இதில் விதவிதான நுழைவுத்தேர்வுகள் வேறு. இத்தகைய சூழலில் படிக்கும் ஒரு மாணவனின் மனநிலையை யோசித்து பாருங்கள்.

மாணவர்களின் நிலை இப்படியென்றால் பள்ளி/ கல்லூரி படிப்பை முடித்த இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பின்றி இருக்கிறார்கள். ஆண்டுக்காண்டு கல்விவளர்ச்சியில் முன்னேறியிருக்கிறோமே தவிர வேலைவாய்ப்பில் பின்னோக்கியே செல்கிறது தமிழகம். இவை அனைத்துமே தரமற்ற கல்வியால் நாம் அடைந்த பிரதிபலன்களே...

வருடாவருடம் பள்ளி சேர்க்கை ஆரம்பிக்கும்போது மட்டும் இதுபோன்ற பிரச்சனைகளை பேசிவிட்டு பின்னர் நாம் அப்படியே விட்டுவிடுகிறோம். அடுத்த ஒரு வருடத்திற்கு அதைப்பற்றி பேசுவதில்லை.

கல்வி வளர்ச்சி நாள் அன்றும் பெருந்தலைவரின் சிலைக்கும் உருவப்படத்திற்கு மாலையும் மரியாதையும் செய்கின்றோம். ஆனால் அதை விடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கல்வித்தரத்தில் இருக்கும் குறைகளை களைந்து, உலகத்தரத்திலான, சமமான கல்வியினை அனைவரும் பெற வழிவகுப்பதே உண்மையில் கல்விக்கண் திறந்த கடவுளுக்கு நாம் செய்யும் சிறப்பான மரியாதையாக இருக்கும்.

நன்றி..!

No comments:

Post a Comment