தண்ணீர்..! தண்ணீர்..!

வழக்கத்திற்கு மாறாக, இந்த வருடம் கோடை வெகு விரைவில் தொடங்கி நம்மை வாட்டி வதைக்கிறது. கோடை வெயில் ஒரு பிரச்சனை என்றால், தண்ணீர் தட்டுப்பாடோ மற்றொருபுறம் நம்மை கதிகலங்க செய்துகொண்டிருக்கிறது. ஒருசாரார் அரசாங்கத்தை குறை கூறியும், மற்றொருசாரார் இதற்கான தீர்வை தேடியும் வருகின்றனர்.

பல்வேறு சாத்திய / அசாத்திய கூறுகளை கொண்டு பல தொலைக்காட்சிகளில்  மிகப்பெரிய விவாதப்பொருளாக சமீப காலங்களில் வலம்வந்து கொண்டிருக்கின்றது இந்த பிரச்சனை.



இருப்பினும் இந்த பிரச்சனை நேற்றோ இன்றோ உருவானது அல்ல. காலங்காலமாக ஒவ்வொரு கோடையிலும் நாம் தொடர்ந்து சந்தித்து வரும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று.

நீர் மேலாண்மை, நதிநீர் இணைப்பு, புதிய அணை,  நீர்நிலைகளை  தூர்வாருதல் என நாம் இப்போது பேசும் அனைத்துமே 'கண் கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம்' என்பது போலதான்.  ஏனெனில் பாதிக்கும் மேற்பட்ட நீர்நிலைகளை அழித்து, குடியிருப்பு பகுதிகளாக மாற்றிவிட்டோம். அத்துடன் நமது தேவை முடிந்துவிடவில்லை. ஆகையால் காடுகளையும் நமது ஆசைக்காக கான்கிரீட் காடுகளாக மாற்றிவிட்டோம். இந்த இரண்டு காரணங்களால் நிலத்தடி நீரையும் இழந்தோம். நீர் நிலைகளில் தண்ணீரை தேக்கி வைக்கும் வாய்ப்பையும் இழந்தோம். நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறு, இலவசமாகக் கிடைக்க வேண்டிய தண்ணீரை, தற்போது பணம் செலவழித்து வாங்கி பயன்படுத்துகிறோம். 



இந்த நிலை தொடர்ந்தால், நமது அடுத்த தலைமுறையினர் தண்ணீரைப் பார்ப்பதே அரிதாகி விடும். நம்மிடம் பணம், பொருள் என அனைத்தும் இருக்கும். ஆனால் எவ்வளவு விலைக் கொடுத்தாலும் கிடைக்காத அளவில் நீர் இருக்கும். ஏற்கனவே சொன்னதுபோல, மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

இந்த நிலை மாற வேண்டுமென்றால் இனியேனும் நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும். 

  • நம்மால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு மரங்களை வளர்க்க முற்படவேண்டும்.
  • அனைத்துக் கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்புமுறையை செயல்படுத்துவதன் மூலம், நிலத்தடி நீரின் அளவையும் தரத்தையும் உயர்த்தலாம். 
  • புதியதாக வீட்டுமனை வாங்க நினைக்கும்போது அந்தப்பகுதியில் உள்ள நீர் நிலைகளைப் பற்றி விசாரித்து வாங்குவது நல்லது. ஏனெனில் நீங்கள் வாங்க நினைக்கும் இடம் கூட முன்னொரு காலத்தில் ஏரியாகவோ குளமாகவோ இருக்க வாய்ப்புள்ளது. அப்படி இருக்கும்பட்சத்தில் அந்த இடத்தை வாங்குவதை தவிர்த்துவிடுங்கள். 
  • தண்ணீர் சிக்கனம், நீர் மேலாண்மை என சில விஷயங்களைக் கடைபிடிப்பதன் மூலம் தண்ணீர் சேமிப்பு அதிகமாகும்.
அனைத்து திட்டங்களையும் அரசாங்கமே சட்டம் இயற்றி நிறைவேற்றவேண்டும் என நினைப்பதைவிட, இதுபோன்ற சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம், எதிர்கால சந்ததியினர் நலமுடன் வாழ நம்மால் வழிவகை செய்யமுடியும்.

'நீரின்றி அமையாது உலகு' என்பதன் பொருள் உணர்ந்து இனியேனும் நடப்போம். 

நன்றி..!

No comments:

Post a Comment