மிஸ்வாக்

நவீன உலகில் அனைத்து அன்றாட பொருள்களும் வேதிப்பொருள்களால் ஆட்கொள்ளப்பட்டுவிட்டன. இதற்கு பல் சுகாதாரத்திற்கு பயன்படும் டூத் பிரஷ்களும் பற்பசைளும் விதிவிலக்கல்ல.  ஆனால் 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி' என்பது தமிழர் பாரம்பரியம். தமிழருக்கு எப்படி தனி பாரம்பரியம், கலாச்சாரம் என உள்ளதோ அதே போன்று அரேபியர்களுக்கெனவும் தனி பாரம்பரியம் உள்ளது. மிஸ்வாக் மரம் பற்றி யாரேனும் கேள்விப்பட்டதுண்டா? 



ஏறத்தாழ ஏழாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, மனிதனின் பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தப்படுத்த உதவும் Salvadora persica எனும் தாவரப்பெயர் கொண்ட மிஸ்வாக் அரேபியர்களின் பாரம்பரியமாக கருதப்படும் ஒரு துவர்ப்பு சுவை கொண்ட சிறு மர வகையைச் சேர்ந்த தாவரமாகும். Salvadorine, Pinene, Carvacrol, Thymol போன்ற ஆல்கலாய்டுகள் அதற்கு பிரத்தியேக மணத்தினை தருவதுடன் மூச்சுக்குப் புத்துணர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பற்களின் பழுப்பு நிறக் கறைகளை அகற்றி, பல்லின் எனாமலை காத்து வெண்மை நிறத்தையும் அளிக்கிறது. மேலும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் பற்சிதைவையும், வாய் துர்நாற்றத்தையும் கட்டுப்படுத்துகின்றது.



'உலகின் முதல் டூத் பிரஷ்கள்' என்ற மிஸ்வாக் குச்சிகளை மெல்லும்போது, அது, பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பூஞ்சகளை (Streptococcus, Porphyromonas, Candida) அழிப்பதுடன், அதிலுள்ள Resin என்ற பிசின், பற்களின் எனாமல் மீது படிந்து பற்சிதைவிலிருந்து பாதுகாப்பளிக்கிறதுடன், ஈறுகள் வீக்கம், பற்களின் மீது படியும் திட்டுகள் (plaques) ஆகியவற்றையும் தடுக்கிறது. இத்தகைய மருத்துவ குணங்களினால் பல் மருத்துவர்களும் இதனை பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர். 1986-ம் ஆண்டு முதல் பல் சுகாதாரத்திற்கென்று உலக சுகாதார அமைப்பு இதனை சிறப்புப் பரிந்துரை செய்து, உலகெங்கும் இதன் பெருமையை பரவச் செய்துள்ளது.



அரேபியர்கள் பாரம்பரியத்தின் படி, இந்த மர குச்சிகளை 'சொர்க்கத்தின் கிளைகள்' என இஸ்லாம் கொண்டாடுகிறது. இறைவனைத் தொழுது மனதை தூய்மைப்படுத்தி கொள்வதற்கு  முன்பாக, மிஸ்வாக் மரக்குச்சியை பயன்படுத்தி  வாயையும் சுத்தப்படுத்திக் கொள்வது இறைவனுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று மிஸ்வாக் மரம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் இறைத்தூதர் நபிகள் நாயகம். இஸ்லாமியர்களின் ஹதீத் குறிப்புகள், ஒருநாளில் குறைந்தது ஐந்து முறையாவது  மிஸ்வாக் குச்சிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.  தூங்குமுன், விழித்தெழுந்தவுடன், தொழுகைக்கு முன், மதச் சம்பந்தமான நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்முன், விருந்துக்கு முன், பயணங்கள் மேற்கொள்ளும் முன்பும் பின்பும் என கட்டாயமாக மிஸ்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறது. 

இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களால் இது சந்தைப் படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இயற்கையான மிஸ்வாக் கிளைகள் அதிகம் கிடைக்காத சூழ்நிலையை பயன்படுத்தி பல வணிக நிறுவனங்கள், அதன் பெயரில் வேதிப் பொருட்களை பயன்படுத்தி பற்பசைகளை தயாரித்து விற்று வருமானமீட்டி வருகின்றன. 

'என்றென்றும் இயற்கை' தான்  ஆரோக்கியம் என்பதை புரிந்துகொண்டு, மிஸ்வாக் குச்சிகள் கிடைக்கவில்லை என்றாலும் ஆலங்குச்சியையும் வேப்பங்குச்சியையும் அதன் அருமை தெரிந்து பயன்படுத்தி பயன்பெறுவோம்...!


நன்றி..!

No comments:

Post a Comment