தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. அனைவரும் யாருக்கு வாக்களிப்பது என்பதை தீர்மானித்திருப்பீர்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும் இதில் விதி விலக்காக, ஓட்டு எதற்கு போட வேண்டும்? நமது ஒரு ஓட்டு நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்குமா? இது போன்ற குழப்பத்தில் இருப்பீர்கள். அவர்களுக்காக இந்த பதிவு ..
கிராமங்களில் திருமணத்தின் போதும், வேறுசில சுபநிகழ்ச்சிகளின்போதும் பங்காளிமுறை, தாய்மாமன் மரியாதை, என சில சடங்குகள் இருக்கும். பங்காளிகளும் தாய்மாமன்களும், முறையை விட்டு கொடுத்தால் கௌரவ குறைச்சல் என எண்ணி, தனது உரிமையை விட்டுக்கொடுக்காது சீர் செய்வார்கள். எப்பேர்ப்பட்ட பகையாளியாக இருந்தாலும், முறை என வரும்போது சீரும் சிறப்புமாக செய்வதில் நம் தமிழரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை.
அதேபோல் தான் வாக்குரிமையும். சொல்லப்போனால் தாய்மாமன் உரிமையை விட வாக்குரிமை தான் முக்கியம். தேர்தலில் வாக்களிக்காமல் 'எனக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை; எனது ஒருவனது ஓட்டு, நாட்டின் தலையெழுத்தை மாற்றப்போவது இல்லை; அனைத்தும் போலி; அனைத்திலும் ஊழல்' என வாய்க்கு வந்தபடி பேசாமல் ஒரு சிறந்த குடிமகனாக தேர்தல் அன்று உங்கள் வாக்குகளை தவறாமல் செலுத்துங்கள்.
'சிறுதுளி பெரு வெள்ளம்'. அதேபோல் நம் ஒவ்வொருவரின் ஓட்டும் தான் நம்மை யார் ஆள போகிறார் என்பதை தீர்மானிக்க போகிறது. ஒருவகையில் இதுவும் நமது கெளரவம் தான். ஆகையால் தவறாமல் தேர்தல் தினத்தன்று, உங்களது பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் செலுத்திவிடுங்கள். நமது உரிமையை நாமே விட்டுக்கொடுக்க வேண்டாமே...!
No comments:
Post a Comment