டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்


விண்வெளி விஞ்ஞானி, ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, மிகச்சிறந்த ஆசிரியர், அற்புதமான பேச்சாளர் என்றெல்லாம் அறியப்படும்மக்களின் குடியரசுத் தலைவர்’  டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள், இன்றைய இளைஞர்களின் எழுச்சி விதை என்றால் அது மிகை ஆகாது. இளைஞர்கள் அனைவரையும் கனவுக் காண சொன்ன ஏவுகணை நாயகனைப் பற்றித்தான் இங்கு காண இருக்கிறோம். 

பிறப்பு மற்றும் பள்ளிப்பருவம்:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15-ஆம் நாள் ஜைனுலாப்தீன் - ஆஷியம்மாவுக்கும் மகனாக தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரத்தில் பிறந்தார்.
இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் பள்ளிப் படிப்பை தொடங்கியவர், குடும்பத்தின் ஏழ்மை நிலையை அறிந்திருந்ததால், பள்ளிநேரம் போக மீதி நேரங்களில் செய்தித்தாள்கள் விநியோகம் செய்துவந்தார்.

பட்டப்படிப்பு:

பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், கல்லூரிப்படிப்பை திருச்சியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் தொடங்கி, 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பின்னரே இயற்பியல் துறையில் தனக்கு ஆர்வம் இல்லை என உணர்ந்தவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய விண்வெளி பொறியில் படிப்பை சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கி, முதுகலைப் பட்டம் பெற்றார்.

ஆராய்ச்சிப்பணி:

வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO - Defence Research and Development Organisation) 1960 ஆம் ஆண்டு, விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கியவர் ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார்.
பின்னர், தனது ஆராய்ச்சிப்பணிகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO - Indian Space Research Organisation) தொடர்ந்து, துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். SLV-III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை 1980 ஆம் ஆண்டு  வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்து இந்தியாவிற்கே உலக நாடுகளுக்கு மத்தியில் பாராட்டைப் பெற்றுத்தந்தார்.
இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி இந்தியாவின் மிகப் பெரிய விருதான 'பத்ம பூஷன்' விருதினை மத்திய அரசு 1981 ஆம் ஆண்டு வழங்கி அவரை  கௌரவித்தது.
தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, பல பணிகளை சிறப்பாக செய்தவர், 1999 ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையிலும் முக்கிய பங்காற்றினார். இந்தியாவை உலக நாடுகள் மத்தியில் அணு ஆயுத வல்லரசாக மாற்றிய அவர், மொத்தம் ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்தார். இந்த காரணத்தினாலேயே அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசு தலைவர்:

இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக, 2002-ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, ஜூலை 25 ஆம் நாள் 2002-ல் பதவியேற்றார். இதன் மூலம், பாரத ரத்னா விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 'மக்களின் ஜனாதிபதியாக' 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக  இருந்தவர், 2007-ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்தது, பிறகு பல காரணங்களால் போட்டியிடாமல் விலகினார்.

விருதுகளும் பட்டங்களும்:

1981-ல் பத்ம பூஷன், 1990-ல் பத்ம விபூஷன், 1997-ல் பாரத ரத்னா, 1997-ல் தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது, 1998-ல் வீர் சவர்கார் விருது, 2000-ல் ராமானுஜன் விருது, 2007-ல் அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம், 2007-ல் கிங் சார்லஸ்-II பட்டம், 2008-ல் பொறியியல் டாக்டர் பட்டம், 2009-ல் சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது, 2009-ல் ஹூவர் மெடல், 2010-ல் பொறியியல் டாக்டர் பட்டம், 2012-ல் சட்டங்களின் டாக்டர், 2012-ல் சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது என இவர் பெற்ற விருதுகளின் பட்டியல் மிகவும் நீளம். 

எழுதிய நூல்கள்:

விஞ்ஞானியாக நம்மால் அறியப்பட்ட இவர் சிறந்த எழுத்தாளரும் கூட என்பதை அனைவருக்கும் தனது நூல்கள் மூலம் தெரியப்படுத்தினார். அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள், அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை ஆகியன இவர் எழுதிய நூல்கள் ஆகும்.

இறுதிக்காலம்:

ஆராய்ச்சி, ஆசிரியப்பணி எனத் தொடர்ந்து தன் வாழ்க்கையை கொண்டு சென்றவர், இறுதிவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. 2015-ம் ஆண்டு ஜூலை 27 அன்று ஷில்லாங்கில் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் (IIM - Indian Institute of Management) கல்விநிலைய விழாவில் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் சரிந்து விழுந்து அவரின் உயிர் பிரிந்தது.

No comments:

Post a Comment