தமிழுக்கும் அமுதென்றுபேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் !
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
பாடல் பொருள்:
அமுதம் மிக இனிமையானது. அது போலவே தமிழும் இனிமையானது. அத்தகைய இன்பம் தரும் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது.
தமிழுக்கு நிலவென்று பெயர். இன்பத்தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றது.
தமிழுக்கு மணம் என்றும் பெயர். அது எங்கள் வாழ்விற்குகாகவே உருவாக்கப்பட்ட ஊர்.
தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான பால் போன்றது. நல்ல புகழ்மிக்க புலவர்களுக்குக் கூர்மையான வேல் போன்ற கருவியாகும்.
தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது. இன்பத்தமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் தேன் போன்றது.
தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க வாள் ஆகும்.
சொற்பொருள்:
நிருமித்த - உருவாக்கிய
விளைவு - விளைச்சல்
சமூகம் - மக்கள் குழு
அசதி - சோர்வு
ஆசிரியர் - பாரதிதாசன்
ஆசிரியர் குறிப்பு:
இயற்பெயர் : சுப்புரத்தினம்
பாரதியாரின் மீது கொண்ட பற்றின் காரணமாக தம் பெயரை மாற்றிக்கொண்டார்.
எழுதிய நூல்கள் : பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை பகுத்தறிவு.
சிறப்பு பெயர்கள் : புரட்சிக்கவி, பாவேந்தர்
No comments:
Post a Comment